உங்கள் வருகைக்கு நன்றி

மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே.

புதன், 16 ஆகஸ்ட், 2017

நம்மில் பலருக்கும் பணக்காரர் ஆக வேண்டும்; லட்சாதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நம்முடைய ஆசை நிறைவேறுகிறதா... கனவு நினைவாகிறதா என்றால், நிச்சயம் இல்லை. தினமும் அந்த வேலை, இந்த வேலை எனச் சிறிய சிறிய வேலைகளுக்காகவே நாயாக, பேயாக உழைக்கிறோமே தவிர, நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள, வசதியை மேம்படுத்திக்கொள்ளப் பெரிதாக நினைப்பதுமில்லை; நினைப்பதை நிறைவேற்றவும் முடிவதில்லை. 

`பணம் இருந்தால் மட்டும் பணக்காரர் ஆகிவிட முடியாது. சிக்கனம், சேமிப்பு, முதலீடு, திட்டமிடலும் இருந்தால் மட்டுமே பணக்காரர் ஆக முடியும்; தொடர்ந்து லட்சாதிபதியாக நிலைக்க முடியும்'' என்கின்றனர் சிகரத்தைத் தொட்டவர்கள். அதே சமயம் ``40, 50 வயதில் பணக்காரர் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை 40, 50 வயதில் யோசிப்பதைவிட, 10, 20 வருடங்களுக்கு முன்பே அதுகுறித்து நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழ்க்கையை வழிநடத்தினால் வெற்றி கிட்டும்'' என்கின்றனர் அனுபவசாலிகள். 
அறிஞர்கள் அருளிய எளிய வழிகள் உங்களுக்காக...
வருமானத்தைப் பெருக்கிக்கொள்! 
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பணக்காரர் ஆவது, அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால், அதற்கான முதல் படி ஒவ்வோர் ஆண்டும் நாம் வளர்வதைப்போல, நம்முடைய வருமானமும் வளர வேண்டும். அது மாத சம்பளதாரராக இருந்தாலும் அல்லது ஏதேனும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் வருமானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கவில்லையெனில், திறமையை வளர்த்துக்கொண்டு, உங்கள் துறையில் எங்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதைப் பார்த்து அங்கு மாறிக்கொள்வது சிறந்தது. உங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வது நல்லது. 
இரண்டாவது வேலை! 
உங்களுக்கு என ஒரே பணி, ஒரே சம்பளம், ஒரே வருமானம் என வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையை நடத்தாதீர்கள். எந்த வழியில் எல்லாம் வருமானம் ஈட்ட முடியுமோ, அந்த வழியில் எல்லாம் முடிந்த வரை வருமானம் ஈட்டத் தயாராகுங்கள். வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் காலத்தைக் கடத்தாதீர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஆகையால், சிறிய வேலையாக இருந்தாலும் சரி, பெரிய வேலையாக இருந்தாலும் சரி முடிந்த வரை உங்களை வளைத்து வேலை செய்யுங்கள், வருமானத்தை ஈட்டுங்கள். 
சேமிக்கப் பழகு! 
உங்களுடைய முதல் மாதச் சம்பளம் அல்லது உங்களுடைய இப்போதைய வருமானத்திலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள். சேமிப்பு என்பதற்காக அந்தப் பணத்தை உண்டியலிலோ, பீரோ லாக்கரிலோ போட்டு வைப்பது சேமிப்பாகாது. இதனால் எந்த ஒரு பலனும் இல்லை. மாறாக, உங்களுக்கு நன்கு தெரிந்த, விருப்பமான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். தேவையில்லாத, அநாவசியமான செலவைக் குறைத்து நல்ல முதலீட்டுத் திட்டத்தில் நீண்டகாலத்துக்கு முதலீட்டை மேற்கொள்ளுங்கள். 
இலக்கை நிர்ணயிக்காதீர்கள்! 
வாழ்க்கையில் இலக்கு என்பது மிக அவசியம். ஆனால், வருமானம் விஷயத்தில் மட்டும் இலக்கு என எதையும் நிர்ணயிக்காமல், கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராமல் ஓடிக்கொண்டே இருந்தால் மட்டுமே அதிக வருமானத்தை ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆண்டுக்கு `ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என இலக்கு நிர்ணயித்து ஓடாமல், `10 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட வேண்டும்' என ஓடி உழையுங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அதே சமயம் அதற்காகப் பல மடங்கு பாடுபடுங்கள். 
நேரம் ஒதுக்குங்கள்! 
தினமும் தூங்குவதற்கு முன்போ அல்லது வேறு ஒரு நேரத்திலோ குறைந்தது 5 அல்லது 10 நிமிடம், இன்று என்ன செய்தோம் என்பதை யோசியுங்கள். வாழ்க்கையை வளமாக்குவதற்காக இதுவரை சரியாகச் செய்தோமோ, செய்துவருகிறோமோ என உங்கள் பாதையை நீங்களே பின்னோக்கிப் பாருங்கள். குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நீங்கள் சரியான பாதையில்தான் செல்கிறீர்களா என உங்கள் பாதையைப் பார்த்துவிட்டு அதன் பிறகு பயணியுங்கள். இதில் ஏதாவது தவறு இருந்தால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாற்றம், முன்னேற்றம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எல்லாமே. 
நல்ல நண்பர்கள்! 
பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, நம்முடைய உழைப்பு மற்றும் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து வேலை செய்யக் கூடாது. பணம் சம்பாதிப்பதைவிட நல்ல நண்பர்களை, உறவுகளைச் சம்பாதிப்பதும் மிகவும் முக்கியம். ஆகையால், என்னதான் உங்களுக்கு வேலை அல்லது தொழில் பிரச்னையாக இருந்தாலும் அதை வேறு ஒருவரிடம் காட்டாமல், மென்மையான அணுகுமுறையையே என்றும் கையாளுங்கள். ஏனெனில், பிறருடைய ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல் எந்த ஒரு லட்சியத்தையும் அடைய முடியாது; லட்சத்தையும் சம்பாதிக்க முடியாது.
  நன்றி - விகடன்


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets