உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியம் தான் சொத்து

வியாழன், 20 ஜூலை, 2017

உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். 

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும். 

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். 

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். 

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.

டென்ஷன்' ஏன் ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று 'டென்ஷன்... டென்ஷன்' என்று தவித்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை தந்த விரும்பத்தகாத பரிசுகளுள் ஒன்று இந்த 'டென்ஷன்' எனப்படும் மனஉளைச்சல்’. முன்பு எப்போதாவது என்று இருந்த டென்ஷன், பிறகு அவ்வப்போது ஆகி, இன்று அடிக்கடி என்றாகிவிட்டது.

மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடி இது. இதிலிருந்து நவீன மனிதனால் முற்றிலும் விடுபட முடியாது. ஆனால் டென்ஷனை மேலாண்மை செய்ய முடியும். அதற்கு, டென்ஷன் என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்...

டென்ஷன் என்பது ஒரு பொருளின் இறுக்கத்தைக் குறிக்கும். உலகில் சில பொருள்கள் இயல்பில் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். உலோகங்கள், மரங்கள், கற்கள் போன்றவை அப்படி இறுக்கமாக இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். காகிதம், நூல், செடி கொடி போன்றவை நெகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

சில பொருட்கள் இரண்டு அம்சங்களும் கொண்டவை. எடுத்துக்காட்டு, களிமண் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பொருளியல் பண்புகளான இவை, நம் உடலுக்கும் பொருந்தும். நமது உடல் இறுகு பொருள்களும், நெகிழ் பொருள்களும் கலந்த கலவை. எலும்பு, தசை நார், தோல், ரத்தக் குழாய் ஆகியவற்றின் கூட்டுப்படைப்புதான் நம் உடம்பு.

இவற்றில் சில, நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில, இறுக்கமாக இருக்க வேண்டும். நெகிழ்ச்சி உறுப்புகள் இறுகக் கூடாது. அதேபோல் இறுகு உறுப்புகள் நெகிழக் கூடாது. எலும்பு நெகிழ்ந்தால் எலும்புருக்கி நோயாகவும், ரத்தக்குழாய் இறுகினால் ரத்த அழுத்தமாகவும் ஆகும்.

இந்தப் பண்பு மனதுக்கும் பொருந்தும். நமது மனம் இளகியும், இறுகியும் இருக்க வேண்டும். நோக்கத்துக்கு ஏற்ப அது அமையும். பசி, தாகம் எடுக்கும்போதும், உறக்கம், பாலுணர்வு உந்தும் போதும் மனம் இறுகிவிடும். ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். மாறாக, எதை உண்பது, எங்கே படுப்பது எனும் போது இளக வேண்டும்.

விலங்குகள் அப்படித் தான் வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு இயற்கையாகவே இறுகுதன்மை உள்ளது. இது ஆபத்தில்லாதது. மனிதனிடம் செயற்கை இறுகுதன்மையே அதி கமாக உள்ளது. இதைத்தான் சாப்பிட வேண்டும், இங்கேதான் படுக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களிடம் மிகுதியாக இருக்கிறது.

அப்படி அமையாதபோது டென்ஷன் ஆகிறான். எனவே டென்ஷன் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. அப்படி ஏற்படுத்திக்கொள்ள சமூகமே கற்றுக்கொடுக்கிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும்போது டென்ஷன் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று, அந்த எண்ணத்தின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவல். மற்றொன்று, சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாமை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்த வேலையை செய்ய முடியாமல் போனாலோ, எடுத்த பணியை முடிக்காமல் போனாலோ நிச்சயம் டென்ஷன் தான்.

யாரேனும் நமக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும் டென்ஷன் ஏற்படும். அச்சூழலுக்கு, இரு மனங்களின் நெகிழ்ச்சிக் குறைபாடே காரணமாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு டென்ஷன் பட்டியல் கட்டாயம் இருக்கும். அவற்றை நாம் முழுவதும் போக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது.

மாறாக, அவற்றால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். நேரத்தை திட்டமிடுவது போன்றவை டென்ஷனை தவிர்க்கும். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற டென்ஷன்களை தவிர்த்தாலே, பெரும்பாலும் நிம்மதி தான்! 


Read more...

நீங்கள் நிர்வகிக்க வேண்டியது எதை ?

அடிக்கடி டைம் மேனேஜ்மெண்ட் பற்றி என்னிடம் ஒரு கேள்வி எழுப்பப் படும்.‘நேரத்தை நிர்வகிப்பது எப்படி?’நேரத்தை நீங்கள் எதற்காக நிர்வகிக்க வேண்டும்? தன் சுழற்சி, சூரியனை வலம் வரும் பாதை என்று எல்லாவற்றையும் வைத்து நேரத்தை பூமி அல்லவா நிர்வகித்துக்கொண்டு இருக்கிறது? 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் என்பதை எல்லோருக்கும் பொதுவாக பூமியல்லவா கவனித்துக்கொள்கிறது?எந்த நேரத்தில் எதைச் செய்து முடிப்பது என்று இருக்கும் நேரத்தைப் பங்கிட்டுப் பயன்படுத்தும் எளிதான வேலைதான் உங்களுடையது. தேவையில்லாமல் அதை ஏன் சிக்கலாக்கிக் கொள்கிறீர்கள்?
கவனியுங்கள்
பெரும்பாலான வேலைகளை நீங்களாகத்தான் விரும்பி ஏற்றிருக்கிறீர்கள். யாரும் உங்கள் மீது திணிக்கவில்லை.சிலர், வாரம் ஒருமுறை பார்ட்டிக்குச் செல்வர். வேறு சிலர் தினமும் கோயிலுக்குச் செல்வர். இப்படி ஒவ்வொரு தனி நபரும் எதை அவசியம் என்று கருதுகிறார், எதற்கு முக்கியத்துவம் தர விரும்புகிறார் என்பதை வைத்துத்தான் இருக்கும் நேரத்தைப் பங்கிட முடியும்.
பெரிய நிறுவனங்களின் அதிபர் அவர். வேலைகள் முடிந்து வீடு திரும்ப தினமும் தாமதமாகிவிடும். ஓர் இரவு வீடு திரும்பியபோது, அவருடைய ஆறு வயது மகன் உறங்காமல் அவருக்காக விழித்திருப்பதைக் கண்டார்.
என்ன மகனே?”
அப்பா, ஒரு மணி நேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப் பீர்கள்?”சிறு வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் காட்டும் மகனை அதிபர் மகிழ்ச்சியுடன் பார்த்தார். சில கணக்குகள் போட்டார். “பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பேன். ஏன் கண்ணா?”மகன் தன் பிஞ்சுக் கைகளை அவரிடம் நீட்டினான். “எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாகக் கொடுப்பீர்களா அப்பா? வளர்ந்து வேலைக்குப் போனதும் திருப்பித் தருகிறேன்”.
தந்தை அதிர்ந்தார். “உனக்கு எதற்கு ஐந்தாயிரம் ரூபாய்?”
உங்களுடைய நேரத்தில் அரை மணி நேரத்தை வாங்கு வதற்காக அப்பா!” என்றான் மகன்.
எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதை இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறார்கள்.
நேரத்தை வீணாக்காதீர்கள்
எல்லோருக்கும் ஒரே விதி பொருந்தாது. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான். கிடைத்த நேரத்தில் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், அதற்கு உங்கள் உள்சூழ்நிலை பதற்றமில்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வேலையைச் செய்யும்போது, கவனமின்றி சிந்தனை அலை பாய்ந்துகொண்டிருந்தால், களைப்பு, அமைதியின்மை, மன அழுத்தம் எல்லாம் வரும். உங்கள் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிடும். உங்கள் உடலும், மனமும், சக்தியும் எந்த அளவு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துதான், குறிப்பிட்ட நேரத்தில் உங்களால் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலும் என்பது தீர்மானமாகும்.ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வீட்டு வேலையானாலும் சரி, தொழில் நடத்துவதானாலும் சரி, உடற்பயிற்சி செய்வதானாலும் சரி, நேரம் கடந்து செய்யும் பல வேலைகள் அர்த்தமற்றுப் போய்விடுகின்றன. வேறு எதைத் தொலைத்தாலும் திரும்பப் பெற வாய்ப்பு உண்டு. தொலைந்துபோன விநாடிகளை எப்பேர்ப்பட்டவராலும் மீட்க இயலாது.
நேரம் தவறாமை
ஒவ்வொரு கணத்திலும், கரைந்துகொண்டு இருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை. இது தத்துவம் அல்ல. வேடிக்கைப் பேச்சும் அல்ல. சத்தியமான உண்மை. நேரத்தின் மதிப்பைப் பற்றித் தெளிவான கவனத்துடன் இருந்தால், வாழ்க்கையைப் பற்றியும் தெளிவாக இருப்பீர்கள். அது கண்ணாடியை விடவும் சுலபமாக நொறுங்கக்கூடியது என்பதை உணர்ந்தால், நேரத்தைக் கவனமாகக் கையாள்வீர்கள்.நேரம் மதிப்பு மிக்கது என்பதால்தான், ஈஷா யோகா வகுப்புகளில் நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இது ஏதோ ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்காக அல்ல. நேரத்தின் மதிப்பை அறிந்திருப்பது அடிப்படையான கண்ணியம் என்று நினைக்கிறேன்.
யாரையாவது காத்திருக்க வைப்பது பெருமை என்று நினைப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன்.எனக்கு ஒருபோதும் இதில் சம்மதம் இல்லை. என் நேரம் எப்படி, என் வாழ்க்கையோ. அப்படி அவர்கள் நேரம் அவர்களுடைய வாழ்க்கை. மற்றவர் வாழ்க்கையை வீணடிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சில சமயம் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இருப்பதற்காக, என் வாழ்க்கையைப் பணயம் வைத்து, வேகமாகப் பயணங்களில் ஈடுபட்டிருக்கிறேன்.
கால இயந்திரம்
என் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால் மட்டும் நேரம் என்ற பிரக்ஞையே எனக்கு இல்லாது போய்விடுகிறது. இதை விளக்கிச் சொல்வது கடினம். நீங்களே ஒரு கால இயந்திரம்தான். இறந்தகாலமும், எதிர்காலமும் உங்களுக்குள் இக்கணத்தில் பொதிந்திருக்கின்றன. இந்தக் கணத்தில் பிரம்மாண்டத்தை அனுபவிக்கத் தெரியாதபோதுதான், நீங்கள் இல்லாத ஏதோ வேறு ஒரு கணத்தில் இருக்கப் பார்க்கிறீர்கள்.
ஓய்வின் அவசியம்
நேரத்தின் அருமை புரியாதவர்கள்தான், வேலைகளைத் தள்ளிப்போடுவதே சரியான தீர்வு என்று பழக்கமாக்கிக்கொள்வார்கள். அதே சமயம், இடைவெளியே இல்லாமல் உழைப்பதும் தவறு. உடலுக்கும், மனதுக்கும் அவ்வப்போது ஓய்வு கொடுத்தால்தான், முழுமையான திறமை வெளிப்படும். முறையான யோகா இதற்கு உதவும்.யோகாவுக்கு ஏது நேரம் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். யோகாவை முறையாகப் பயிற்சி செய்தால், தூக்கத்தின் தேவை குறைந்துவிடும். விழித்திருக்கும் நேரம் கூடிவிடும். உங்கள் உடலும், மனமும் இன்னும் சிறப்பான ஓர் ஓழுங்கமைப்புக்குள் வந்துவிடும்.நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உங்கள் உடல் பல தேவையற்ற அசைவுகளைக் கவனமில்லாமல் செய்வதைத் தவிர்த்துவிடும். தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற வார்த்தைகள் இவை காணாமல் போகும். ஆறு வாரங்களில் உங்கள் செயல்திறன் கூடும். எட்டு மணி நேரத்தில் செய்யக்கூடியதை மூன்று, நான்கு மணி நேரத்தில் செய்து முடித்துவிடுவீர்கள்.நீங்கள் எவ்வளவு மணிநேரம் செயல்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில், நீங்கள் எவ்வளவு நேரம் உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்திச் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது.உங்கள் வாழ்க்கையில் எதுவும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதில், நீங்கள் 100 சதவிகிதம் உறுதியாக இருந்தால், அந்தத் தெளிவே அதற்கான நேரத்துக்கு முன்னுரிமை கொடுத்துவிடும். போராட்டம் இருக்காது. பதற்றம் இருக்காது. குழப்பம் வராது. களைப்பு தாக்காது.
நீங்கள் நிர்வகிக்க வேண்டியது நேரத்தை அல்ல... உங்களை!


Read more...

மனிதனின் வயிறு,

புதன், 19 ஜூலை, 2017

மனித இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான  உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...
1 உடற்பயிற்சிக் கூடம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள்  பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce  or Burn Extra  Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது  மடமையே. தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can  lead to muscle loss).
2
ஆரோக்கிய உணவு 
நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a  pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை  தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த  சரிவிகித உணவு (Balanced Diet)    எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த  பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு  உத்தமம். 
3. நிறைய தண்ணீர் 
உங்களின் எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

4.
எலும்புகளுக்குகால்சியம்
அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ  கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப்பிடிப்பு உண்டாகும். 

5
ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு  மூலகாரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த  நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான  உறக்கம்!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets