உங்கள் வருகைக்கு நன்றி

உண்மையான காரணகர்த்தர்கள் யார் ?

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தூக்கத்தை இழந்து ரொம்ப நாளாச்சுப்பா... என்ற புலம்பல் சப்தம் எங்கும் எதிரொலிக்கிறது.
மனிதனுக்கு ரொம்ப அவசியமானது தூக்கம். குறிப்பிட்ட சில மணிநேரமாவது ஒரு மனிதன் உறக்கத்துக்கு ஒதுக்கியாக வேண்டும். இன்றைக்கு அந்த சில மணித்துளிகளும் தூங்கமுடியாமல் தவிப்பதற்கு யார் காரணம்? கொசுக்களா? இல்லை இவற்றைக் கட்டுப்படுத்த தவறிய மக்கள் பிரதிநிதிகளா? என்ற விவாதம் ஒருபுறம் நடக்கிறது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போனால் உண்மையான காரணகர்த்தர்கள் யார் என்பது புரியும். இயற்கைக்கு முரணான செயல்களைப் பெரும்பாலானோர் தைரியமாகவும், எதார்த்தமாகவும் செய்யப் பழகிவிட்டு, இப்போது புலம்புவதில் பயன் என்ன?
இன்றைக்கு வானுயர்ந்த கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மாளிகை குடியிருப்புகள், மருத்துவமனைகள் பார்ப்பதற்கு கண்ணுக்கு அழகாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கின்றன.
இவற்றுக்காக எத்தனை குளம், குட்டைகள், மழைநீர் வரத்துக்கால்வாய்கள் போன்றவற்றை நாம் இழந்திருக்கிறோம் என்பதை யாராவது நினைத்துப் பார்க்கிறோமா?
முறையான இடத்தில் அரசு அங்கீகாரத்தையும் முறையாகப் பெற்று கட்டடம் கட்டியவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த வகையினர் சொற்ப அளவில் தான் இருக்கின்றனர்.
மூதாதையர் உருவாக்கிய குளம், குட்டைகள், கால்வாய்களை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டதைக் கண்டிக்க யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா?
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள குளம், குட்டைகள் மற்றும் கால்வாய்களின் வடுக்களாக ஆங்காங்கே சிறு சிறு பகுதிகளாக வெளித்தெரியும் இடங்கள் கழிவுநீர் தேங்கும் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில்தான் கொசுக்கள் விதவிதமாக அபரிமிதமாக உற்பத்தியாகின்றன.
இவற்றை ஒழிக்கப்போகிறோம் பேர்வழிகளாக தங்களை முன்நிறுத்திக் கொண்டு, மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கொசுமருந்துகளைத் தெளிக்கின்றனர் உள்ளாட்சி அமைப்பினர். வீரியம் குறைந்த மருந்துகளைத் தொடர்ச்சியாக தெளிப்பதை விடுத்து, அவ்வப்போது மருந்து தெளிப்பை நடத்திவிட்டு கொசுக்களை ஒழிப்பதாக கூறுகின்றனர்.
ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை. தரம் குறைந்த, வீரியம் குறைந்த மருந்துகளைத் தெளிப்பதால் கொசுக்கள் ஊட்டச்சத்து மருந்து போன்று அவற்றை உள்கொண்டு  மேலும் மேலும் உற்பத்தியாவதாகத்தான் தெரிகிறது.
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் "ஆயில்பால்', "கொசுக்களைக் கொல்லும் மீன்கள்' ஆகியவற்றை சில மாநகரங்களில் பயன்படுத்த பல கோடியில் திட்டங்களை அறிவித்தனர். இந்த திட்டங்கள் என்னவாயிற்று என்பது இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது.
ஆறுகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுவைத்துள்ளார்களா? மணல் கொள்ளை ஒருபுறம் நடக்கிறது. இன்னொருபுறம், இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, பல ஆயிரம் கட்டடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் கால்வாயாகவும் ஆறுகள் மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றிலும் அபரிமிதமாக கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இப்படி கொசுக்கள் உற்பத்திக்கு ஊக்கங்களைக் கொடுத்துவரும் அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தட்டிக்கேட்கத் தவறிவிட்டு, இப்போது கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
இப்போதுள்ள நிலையில் தூக்கத்தை மட்டும்தான் இழந்திருக்கிறோம். இனியும் இதுபோன்ற விதிமீறல்களைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்காலச் சந்ததிகளுக்கு கொசுக்களால் கண்டறிய முடியாத நோய்கள் பரவக்கூடிய பேராபத்தையும் உருவாக்கிவிடுவோம் என்பதை பொதுஜனங்கள் மட்டுமன்றி, மக்கள் பிரதிநிதிகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு இனியாவது முடிவுகட்டுவோம். முறையான கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற உள்ளாட்சி அமைப்பினரும் உறுதிஎடுத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கொசுக்களை முழுமையாக ஒழிக்காவிட்டாலும், கட்டுப்படுத்தி  தூக்கத்தையாவது  இழக்காமல் தவிர்க்க முடியும்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets