உங்கள் வருகைக்கு நன்றி

சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் முன்பு

புதன், 18 ஏப்ரல், 2012


கோடை விடுமுறைகள் துவங்கிவிட்டன.  பள்ளி, கல்லூரிகளுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்ததும் சுற்றுலாவிற்கு கிளம்பிவிடுவார்கள் பலரும். சுற்றுலா கிளம்புவதற்கும், மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

உங்கள் கேள்விக்கான பதில்

பொதுவாக குடும்பத்துடன் சுற்றுலா செல்வது என்றால், குடும்பத்தில் வயதானவர் முதல் சிறியவர் வரை இருக்கக் கூடும். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சில உடல் உபாதைகள் இருக்கலாம். அவரை எவ்வாறு சுற்றுலா அழைத்துச் செல்வது என்று யோசித்து சுற்றுலா திட்டத்தை கைவிட வேண்டாம். நோயுற்றவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவரை பரிசோதனை செய்து சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் விஷயத்தைக் கூறி ஆலோசனை பெறலாம்.  மருத்துவர் சுற்றுலா செல்ல அனுமதி அளித்தால் மகிழ்ச்சியாக சுற்றுலா சென்று வாருங்கள். சுற்றுலா செல்வதற்கு முன்பு, உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளை தேவையான அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் பற்றியும், உங்களுக்குள்ள நோய் மற்றும் பிரச்சினை குறித்து உங்களுடன் சுற்றுலா வரும் ஒரு நபர் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

நீங்கள் கண்ணாடி அணிபவராக இருப்பின், உங்களுடன் மற்றொரு கண்ணாடியையும் கூடுதலாக எடுத்துச் செல்லுங்கள். ஏதேனும் காரணத்தால் உங்கள் கண்ணாடி உடைய நேரிட்டால் அது உதவும். சில நாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால், ஒரு சில வியாதிகளுக்கு தடுப்பூசிகளை போட்டிருக்க வேண்டும் என்று அந்நாடு வலியுறுத்தும். எனவே, அது பற்றி உடனடியாக அறிந்து கொண்டு ஒன்றரை முதல் 2 மாதங்களுக்கு முன்னதாகவே அதுபோன்ற தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு திடீரென சுற்றுலா செல்ல திட்டமிட்டால், அது பற்றி மருத்துவரிடம் கூறி அதற்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளலாம்.

எங்கு சென்றாலும் சுத்தமான நீரை குடியுங்கள். ஐஸ், ஜுஸ் போன்றவற்றை சாப்பிடாதீர்கள். எந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்கின்றீர்களோ, அப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலையை முன்னதாக அறிந்து கொண்டு அதற்கேற்ற ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள். சுகாதாரமான முறையில் நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை சாப்பிட்டு உடல்நிலையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets