உங்கள் வருகைக்கு நன்றி

படுக்கையறையில் இருக்க வேண்டியவையும், செய்ய வேண்டிய மாற்றங்களும்

புதன், 18 ஏப்ரல், 2012

ஆழ்ந்து அமைதியாக தூங்க முடிந்தால், மனிதன் இளமையாக இருப்பான். முதுமை அவனை நெருங்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திற்கு கூட ஓய்வு அவசியமாகிறது. அது உலோகத்தால் ஆனதுதானே என்று நினைத்து ஓய்வு தராவிட்டால் என்ஜின் பழுதாகி விடும். அதுபோல நாள் முழுவதும் மனதாலும், உடலாலும் மனிதன் உழைக்கிறான்.

அவனுக்கு ஓய்வு என்கிற தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. தூக்கத்தை குறைத்தால், உடல் ஆரோக்கியமும்- மன ஆரோக்கியமும், செயல் திறனும் குறைந்துபோய்விடும். ஆழ்ந்து, அமைதியாக, நன்றாக தூங்கவேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள்...

* நல்ல தூக்கத்திற்கு மிக அவசியமானவை இரண்டு. ஒன்று படுக்கை. அடுத்து தலையணை. அதனால் இவை இரண்டையும் கவனமாக பார்த்து வாங்கவேண்டும். படுக்கையை வாங்குவதற்கு முன்னால் அதில் படுத்துப்பார்த்து சவுகரியத்தை உறுதி செய்த பின்பே வாங்கவேண்டும். அதன் அழகில் மயங்கினால், நாம் ஆரோக்கியத்தை இழக்க வேண்டியதாகிவிடும்.

* சிலருக்கு படுக்கையை விரித்து படுத்த உடன் தூக்கம் வந்து விடும். உடம்பை தாங்கக்கூடிய ஒரு பாலம் தான் படுக்கை. அது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும்.

* படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

* படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


* தலையணைக்கும், தூக்கத்திற்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. சரியான தலையணையாக இருந்தால், தூக்கத்தின் தடைகளை நீக்கி விடும். தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

* படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

* மனித மூளையை பொறுத்த வரை, வெளிச்சத்தை பார்த்த உடன் விழிப்பு நிலைக்கு வந்துவிடும். எனவே படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும்.

* ரோடு ஓரத்தில் வீடு அமைந்து இருந்தால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணாடி ஜன்னல் வழியாக வீட்டினுள் ஊடுருவி தூக்கத்தை கெடுக்கும். அவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

* சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.

* படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. ஒருவேளை வைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தால் தூங்க போகும்போது பிளக்குக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டெலிவிஷன் போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

* செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.

* படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல! 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets