உங்கள் வருகைக்கு நன்றி

கோடையைச் சமாளிக்க ஜில் ஜில் பானங்கள்

வியாழன், 12 ஏப்ரல், 2012


1 கிலோ அச்சு வெல்லம் வாங்கி 1/2 தம்ளர் தண்ணீர்விட்டு கெட்டிப்பாகு வைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, குளிரூட்டியில் வைத்துக் கொண்டால் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். ஏலக்காய், சுக்கு இரண்டையும் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். கடல்பாசி என்று ஒரு வகை உடலுக்கு குளிர்ச்சி தரும்பொருள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதை ஊறவைத்து குளிரூட்டியில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பெரிய தம்ளர் பானகம்
தயாரிக்க: 2 தேக்கரண்டி வெல்லப்பாகு, 1 சிட்டிகை ஏலம், சுக்குப்பொடி, 1 எலுமிச்சம்பழச் சாறு, 2 தேக்கரண்டி ஊறவைத்த கடல்பாசி, 1 தம்ளர் தண்ணீர் இவற்றைச் சேர்த்துக் கலக்கினால் குளிர்பானம் தயார். வைட்டமின் சி, இரும்புச் சத்து நிறைந்த டானிக்கும் கூட.
ரோஸ்மில்க்
பாலைக் காய்ச்சி ஆறவிட்டு ரோஸ் எசன்ஸ் மட்டும் சில சொட்டுகள் விட்டு குளிரவிட்டு அருந்தலாம். கலர் வேண்டியதில்லை. இதிலும் கடல்பாசி சேர்க்கலாம். 1 கிலோ சர்க்கரையை கெட்டிப்பாகு வைத்து ஆரஞ்ச், ரோஸ், தாழம்பூ, நன்னாரி போன்ற தேவைப்பட்ட எசன்ஸ்களை சேர்த்து ஆற வைத்து பாட்டிலில் ஊற்றி குளிரூட்டியில் வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம். எலுமிச்சம்சாறு, கடல்பாசி சேர்த்துக் கொள்ளலாம். செயற்கை கலர் இல்லாத இயற்கை சர்பத் ரெடி.
பாதாம் கீர்
பாதாம் பருப்பை சுடுநீரில் 5 நிமிடங்கள் போட்டுத் தோலை உரித்துவிட்டு 2 மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். பாலை ஆற வைத்து இந்த பாதாம் கலவை, சர்க்கரை சேர்த்து குளிரூட்டியில் வைத்து அருந்தலாம். மிகச்சிறந்த ஹெல்த் டிரிங்.
எளிய பானங்கள்
* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி ஆகியவற்றை கலந்து குளிரூட்டி அருந்தலாம்.
* பயத்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்லது.
* குறைந்த விலையில் சீசனில் கிடைக்கும் பன்னீர் திராட்சை, தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுதல் நலம்.
* அனைத்து சத்துக்களும் அடங்கிய மல்ட்டி காக்டெயில்- கடைந்த மோர், எலுமிச்சம்சாறு, பெருங்காயம், சீரகப்பொடி, உப்பு, மல்லித்தழை, துருவிய வெள்ளரி, கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம்.
* தேங்காய்ப்பாலை வாரம் இரு முறையாவது உணவில் சேர்க்கவும்.
* பசும்பாலில் சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
* சீரகத்தை வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்க வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதித்ததும் ஆறவிட்டுக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
* இளம் நுங்கு,தர்பூசணித்துண்டுகள் ஆகியவற்றை இளநீரில் போட்டு குளிரூட்டி, அருந்திப் பாருங்கள்
அருமையோ அருமை!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets